டெல்லி:, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட இருக்கும் திரெளபதி முர்மு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
அவரது பெயரை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் மேகாலாயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்கமா மற்றும் நாகலாந்து முதலமைச்சர் நெப்யூ ரியோ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக புதன்கிழமை (ஜூன் 22)மாலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசாவின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முர்முவின் வேட்புமனுவை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அல்ல, இருப்பினும் முக்கியமான மசோதாக்கள் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரதமர் மோடியைச் சந்தித்தார் திரௌபதி முர்மு!