புதுச்சேரி: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரியில் திராவிடர் கழகம் மற்றும் பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் நாளை (செப்.26) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தன. இதேபோல் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வரும் 27ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதனிடையே புதுச்சேரியில் ஃபுளு வைரஸ் காரணமாக கடந்த 9 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன. நாளை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கவுள்ளது. இந்த சூழலில் நாளை முதல் போராட்டங்கள் நடைபெற்றால், மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மாவட்ட ஆட்சியர் வல்லவன், போராட்டத்தை கைவிடக் கோரி, பெரியார் திராவிடர் கழகம், இந்து முன்னணி நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேச முடிவு செய்தார்.
அதன்படி, இன்று திராவிடர் கழகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகத்தினர் நாளை நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ‘தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக உள்ளது’ - முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்