டெல்லி: கடந்த ஜூலை 18அன்று நடந்த குடியரசுத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட திரெளபதி முர்மு அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று (ஜூலை 25) குடியரசுத் தலைவராக பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர், மாநில ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய மண்டபத்தில் திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறையில் ஊர்வலமாக வந்து பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் உரை: இதனையடுத்து நாட்டின் குடியரசுத் தலைவராக அவரது முதல் உரையை ஆற்றினார். அதில் விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவாரானது மகிழ்ச்சி அளிக்கிறது.
தம்மை தேர்ந்தெடுத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு திரெளபதி முர்மு நன்றி தெரிவித்தார். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன் எனக் கூறினார். அடுத்த 25 ஆண்டுக்கான தொலை நோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம் என தெரிவித்தார்.
மேலும் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிபலிப்பு நான், அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் பாடுபடுவோம் எனக் கூறினார். சாதாரண கவுன்சிலராக தொடங்கி, இந்திய குடியரசுத் தலைவராவது இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம் மற்றும் அதன் சக்தி எனக் கூறினார்.
இதையும் படிங்க:நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக முர்மு இன்று பதவியேற்பு