ரஷ்யாவின் ’ஸ்புட்னிக் V’ கரோனா தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு டிசிஜிஐ (இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம்) ஒப்புதல் தெரிவித்த நிலையில், இதற்கு மத்திய அரசு முன்னதாக அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த அவசரகால பயன்பாட்டிற்கு ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டி.சி.ஜி.ஐ) தாங்கள் அனுமதி பெற்றுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகம் அறிவித்துள்ளது. மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டத்தின், புதிய மருந்து மற்றும் மருத்துவப் பரிசோதனை விதிகள் 2019இன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி குறித்த மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும், அதனை விநியோகம் செய்யவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்) டாக்டர் ரெட்டி ஆய்வகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தால் ரஷ்யாவில் நடத்தப்பட்ட முதல் கட்ட கரோனா தடுப்பூசி பரிசோதனைகளைத் தொடர்ந்து, இரண்டாம், மூன்றாம் கட்ட தடுப்பூசி சோதனைகள் இந்தியாவில் டாக்டர் ரெட்டி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அக்குழுமத்தின் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.வி.பிரசாத் "இது மக்கள்தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நமது நாட்டின் முயற்சிக்கு நிச்சயம் பங்களிக்கும். ’ஸ்புட்னிக் வி’ இப்போது உலகெங்கிலும் 60 நாடுகளில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு உலக அளவில் உள்ள அரசாங்க தரக் கட்டுப்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட ஒப்புதல்களின் எண்ணிக்கை அடிப்படையில், ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இரண்டாவது இடத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
உலகின் பழமையான, மிகவும் மதிப்பிற்குரிய மருத்துவப் பத்திரிகைகளில் ஒன்றான லான்செட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, ஸ்பூட்னிக் வியின் செயல்திறன் 91.6 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி