குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாவட்டங்களில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன.
அத்தோடு, ஆக்சிஜன் பற்றாக்குறையும், அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருகின்றன. உயிரிழந்தவர்களை எரியூட்ட மின் தகன மேடைகளின் எண்ணிக்கையை அம்மாநிலங்களின் அலுவலர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், சில இடங்களில் உயிரிழந்தவர்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில், கரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால், மயானங்கள் நிரம்பிவழிகின்றன.
இதனால் மயானத்திற்கு வெளியேயுள்ள கார் பார்கிங் பகுதியில் உயிரிழந்தவர்களை எரிக்கும் அவலம் நேர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 12-க்கும் மேற்பட்ட சடலங்கள் அங்கு எரியூட்டப்படும் காணொலி வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு மட்டுமின்றி, இதைப்போல குருகிராமில் பல இடங்களில் சடங்களை எரியூட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நேற்றிரவிலிருந்து அங்குள்ள மயானத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
தரவுகளின்படி, நேற்றுவரை (ஏப். 25) மொத்தம் 52 சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன; மேலும், அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, குருகிராமில் 11 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.