லக்னோ: உத்தரபிரசேதம் மாநில அரசு மின்வெட்டுக்கு காரணம் கூறி கொண்டிருப்பதை விமர்சித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, எரிசக்திதுறை அமைச்சர் ஏ.கே ஷர்மா, "உத்தரபிரசேதத்தில் உள்ள சில மின் உற்பத்தி நிலையங்கள் தொழில்நுட்ப காரணங்களால் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளன. ஹர்துவாகஞ்ச்- 605 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம், மெஜா- 660 மெகாவாட், பாரா- 660 மெகாவாட் ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதில், ஹர்துவாகஞ்ச் நிலையம் பருவகால புயலால் சேதமடைந்துள்ளது. அவற்றை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, மின்விநியோகம் தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்திருந்தார்.
இதைக் குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் இன்று(ஏப்ரல் 30) தனது ட்விட்டர் பக்கத்தில், அரசாங்கம் பிரச்சனைக்கான காரணம் கூறாமல், அதை சரி செய்து தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், கோடைகாலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், நாளுக்கு நாள் மின்வெட்டு நேரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எனக் குற்றஞ்சாட்டினார். இந்தநிலையில், நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை காரணம் என்றும் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு போதுமான நிலக்கரி வழங்கவில்லை என்றும் பல மாநிலங்கள் அரசுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில் - 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை...!