டெல்லி: தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கு அதற்குரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறியது.
வழக்கறிஞர் தேவ்தத் கமத் ஹிஜாப் விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வைத்தார்.
அவர், உயர் நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்கால வழிமுறைகளை விதிக்கமாறு அப்போது கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்தால்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியும் என்றார்.
ஹிஜாபை அரசியலாகவோ, வகுப்புவாதமாகவோ மாற்றாதீர்!
மேலும் தேவ்தத், "கடந்த 10 ஆண்டுகளாக இஸ்லாமிய மாணவிகள் புர்கா அணிந்துவருகின்றனர். ஆனால் திடீரென இது சில நாள்களாக விவகாரமாக மாறியுள்ளது" என்று வாதிட்டார்.
அதற்கு தேவ்தத்திடம் தலைமை நீதிபதி ரமணா, இந்த விஷயத்தை பெரியளவில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர், இந்த விவகாரத்தை டெல்லிவரை (உச்ச நீதிமன்றம்) கொண்டுவருவது சரியானதா என்று யோசியுங்கள் என அறிவுறுத்தினார்.
மேலும் அவர், "நாங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மாநிலத்தில் (கர்நாடகா) என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்" என்றார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான துணைத் தலைமை அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தை அரசியலாகவோ, வகுப்புவாதமாகவோ மாற்றக் கூடாது என்று வாதிட்டார்.
மறு உத்தரவு வரும்வரை மதக் குறியீட்டு ஆடைகளுக்குத் தடை
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. அதில், உடனே மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குள் அனுமதிக்குமாறு மாநில அரசையும், கல்வி மையங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும்வரை மாணவர்கள் மதங்களை வெளிப்படுத்தும்விதமாக காவித் துண்டு, புர்கா, ஹிஜாப், மதக் கொடிகள் உள்ளிட்ட எவற்றையும் அணிந்தோ, கையில் எடுத்தோ வரக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு, மாணவர்களின் ஆடைக் குறியீடு / சீருடையைப் பரிந்துரைத்துள்ள கல்வி மையங்களுக்கு மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் எனவும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் வரும் 14ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: விவகாரம் முடியும்வரை மாணவர்கள் ஹிஜாபோ காவியோ அணியத்தடை