மேற்கு வங்காளம்: வடக்கு வங்காள மண்டலத்தில் துர்காதாஸ் சர்னி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சர்க்கார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் சர்க்காரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த இடத்திலேயே அவரது ஒரு கை, முழங்கையிலிருந்து துண்டிக்கப்பட்டு இருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு பின், கையை பையில் வைத்து, எலும்பியல் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். காயமடைந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, கையை சரி செய்ய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பையில் இருந்த துண்டான கையை வார்டுக்கு அருகில் வைக்குமாறு வார்டுக்கு பொறுப்பான செவிலியர் தெரிவித்துள்ளார். நோயாளி வார்டில் அனுமதிக்கப்பட்ட பிறகு, நள்ளிரவில் கையைப் பார்க்கையில் காணாமல் போயிருந்தது. இதையடுத்து குடும்பத்தினர் பரபரப்பாக கையைத் தேட ஆரம்பித்தனர்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பின், வார்டின் மேற்கூரையில் நாய் ஒன்று துண்டிக்கப்பட்ட கையை கடித்து குதறிக்கொண்டிருந்தது தெரியவந்தது. பலமுறை முயன்றும் நாயின் வாயிலிருந்து கையை மீட்க முடியவில்லை. இந்நிலையில், இன்று (மே 30) காலை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையை இணைப்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தகவல் தெரிவித்தும், கையைப் பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்து குறித்தும் மருத்துவமனையில் வைத்திருந்த கையை நாய் தூக்கிச் சென்றது குறித்தும் விசாரணை நடத்தினர்.
மேலும், இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சஞ்சய் மல்லிக் கூறுகையில், “சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரிக்கிறோம். ஏற்கெனவே 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கையை இனி இணைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளைய பாரதம் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் - பாஜகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு!