கர்நாடகா மாநிலம், பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள சஷிதர் லேஅவுட்டில் கடந்த வெள்ளிக்கிழமை(மே.14) இரவு 11.30 மணியளவில், சாலையோரம் தங்கியிருந்த வயதான பெண் ஒருவரை தெரு நாய்கள் கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை(மே.13) அந்த மூதாட்டியைத் தெரு நாய்கள் கூட்டம் கடிக்க முயன்றன. ஆனால், அப்போது அவ்வழியே வந்த மக்கள், தெரு நாய்களை விரட்டியடித்தனர். இருப்பினும், அடுத்த நாள் அதே தெரு நாய்கள் கூட்டமாக வந்து மூதாட்டியைக் கடித்ததோடு, அவரது உடல் பாகங்களைத் தின்றுள்ளன.
சாலையில் கிடந்த பாதி உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள், காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில், மூதாட்டியைக் கடித்து கொன்றது சிறுத்தை அல்லது ஏதேனும் வனவிலங்குகளாக இருக்கலாம் என, காவல் துறையினர் சந்தேகித்தனர். ஆனால், அப்பகுதி மக்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணைக்குப் பிறகே, தெரு நாய்கள் கூட்டம் மூதாட்டியைக் கடித்து தின்றன என்பது தெரியவந்துள்ளது.
இதுசம்பவம் தொடர்பாக உள்ளூர்வாசிகள் கூறுகையில்," ஊரடங்கில் உணவின்றி தவித்த தெரு நாய்கள், பசிக்கொடுமையால் மூர்க்கமாகி மூதாட்டியைக் கடித்து தின்றிருக்கலாம்" என்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.