திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஏப்ரல் 20ஆம் தேதி வேலைக்குச் சென்ற தினேஷ் குமார் மாலையில் தனது இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்குத் திரும்பினார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த தினேஷ் குமார் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
அங்கு தினேஷ்குமார் இடது காலில் ஏற்பட்ட காயத்திற்கு பெற்றோர் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில், தினேஷ் குமாரின் காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லை எனக் கூறி காலை வெட்டி அகற்ற வேண்டுமென அவரது உறவினரிடம் மருத்துவர்கள் கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் குமாரின் உறவினர்கள் தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலையறிந்த கோரிமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தினேஷ் குமாரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் சமரசமான உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்த தினேஷ் குமாரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.