புபனேஸ்வர்: இந்தியா மருத்துவத் துறையில் முன்னேறி இந்த பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு கைமாறு பாராமல் உதவி புரிந்து வந்தது. மருத்துவ பொருள்கள் உற்பத்தி, சிறப்பான மருத்துவ சிகிச்சை என பலவற்றில் இந்தியா சிறந்து விளங்கினாலும், பல்வேறு பகுதிகளில் மக்கள் அடிப்படை பொது சுகாதார வசதிகள்கூட கிடைக்கப்பெறாமல் உள்ளனர்.
இவர்கள், பொது சுகாதாரம் கிடைக்கப்பெறாததால் தங்கள் பகுதிகளில் கிடைக்கப் பெறும் பொருள்களைக் கொண்டும், பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் பின்பற்றுகின்றனர். இது இவர்களுக்கு அவசர காலத்தில் உதவி புரிந்தாலும், பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதுபோல எவ்வித அடிப்படை மருத்துவ வசதியுமிறி உள்ள ஒடிசாவின் கதிக்கியா கிராம மக்களுக்கு ஒளி கொடுக்கும் நோக்கத்துடன் உள்ளார் மருத்துவர் சங்கர் ராம்சந்தானி.
ஒடிசாவின் பர்லா பீம்சார் மருத்துவக் கல்லூரியின் மருத்துவரான சங்கர் ராம்சந்தானி, பர்லாவில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு அருகில் ஒரு கிளினிக் ஒன்றை திறந்துள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் எளிய முறையில் தன்னை நாடி வெறும் ஒரு ரூபாய் செலுத்தி மருத்துவ வசதி பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
மாலை 6 முதல் 7 மணிவரை கிளினிக்கிற்கு வரும் நபர்களுக்கு தனது மருத்துவப் பணியை முடித்தவுடன் அவர் கிளினிக்கில் சிகிச்சை அளிக்கிறார். இவரது இந்த கிளினிக்கை அவரது தாயார் திறந்து வைத்தார்.
ராம்சந்தானியின் மனைவியும் பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதால், அவருடைய உதவியும் கூடுதலாகக் கிடைக்கிறது. ஏழை மக்களுக்கு மருத்து வசதி கிடைக்க செய்ய முயற்சித்து வரும் இவர்களை அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.