ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரிலுள்ள சாலையில் காரில் சென்று கொண்டிருந்த மருத்துவ தம்பதியர் சுதீப் குப்தா, சீமா குப்தா ஆகியோரை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து சுட்டுக் கொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவத் தம்பதியின் குடும்பத்தினர் மீது, கடந்த 2019ஆம் ஆண்டு கொலை வழக்குப் பதிவானது தெரியவந்துள்ளது. மருத்துவரான சுதீப் குப்தாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவரின் மனைவியும், அவரது அம்மாவும் அந்த பெண்ணின் வீட்டிற்குத் தீவைத்ததாகவும், இதில் அப்பெண்ணும், அவரது மகனும் உயிரிழந்தனர். இவ்விவகாரத்தில் மருத்துவர், அவரது மனைவி, தாய் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, மூவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதையறிந்த, இறந்த பெண்ணின் சகோதரனும், உறவினரும், மருத்துவர் குடும்பத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அர்ஜூன் குமார், மகேஷ் குமார் ஆகிய இருவரைத் தேடி வருகின்றனர்.