பீகார்: மேற்கு சம்பாரனில் உள்ள ஒரு மருத்துவமனையில், பிறந்த ஆண் குழந்தையை விற்பது தொடர்பாக மருத்துவர் கலந்துரையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிறந்த குழந்தையை கடத்துவதும், கொலை செய்வதும் தற்போது சகஜமாக மாறிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், பிறந்த குழந்தையினை விற்பதற்காக மருத்துவர் ஒருவருடன் கலந்துரையாடி பேரம் பேசுவது இந்த வீடியோவில் அம்பலமாகியுள்ளது.
வீடியோவில், மருத்துவர் புதிதாகப் பிறந்த குழந்தையை விற்பதற்காக அக்குழந்தை குறித்த விவரங்களையும், ஆதாரங்களையும் தனது செல்போனில் காட்டி பேரம் பேசியுள்ளார். பின்னர், அந்த நபர் குழந்தையைப் பற்றி கேட்டு விவாதம் செய்த போது, அவர் விவாதம் செய்வதைப் பார்த்த மருத்துவர் அவரிடம், தான் பணத்திற்காக பேரம் பேசவில்லை எனக் கூறியுள்ளார்.
பின்னர் குழந்தையின் உடல் நிலை குறித்து அந்த நபர் மருத்துவரிடம் கேட்டபோது, 'பொறுமையை இழந்த மருத்துவர், தான் செல்வதை நம்பமாட்டீர்களா? என தனது மொபைல் போனை எடுத்து, குழந்தையின் படங்களை காட்டி, குழந்தை முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறது. குழந்தை நேற்று இரவு தான் பிறந்தது, பிறந்தவுடன் 2.5 கிலோ தான் இருந்தது, ஆனால் தற்போது குழந்தை மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. ஆகையால், அந்த குழந்தையின் விலை ரூ.4 லட்சம்' எனக் கூறி பணத்தை வாங்கியுள்ளார்.
வெளியான வீடியோவின் அடிப்படையில் விசாரணை, மருத்துவர் டேபிளில் உள்ள மருந்து சீட்டைப் பார்க்கும் போது, அந்த இடம் பெட்டியா, இந்திரா சௌக்கில் உள்ள "நீது அறுவை சிகிச்சை" என்ற தனியார் கிளினிக் என கண்டறியப்பட்டது. பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக, அந்த மருத்துவர் மீது 24 மணி நேரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.