சென்னை: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம், வருகிற 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சில முக்கிய திரைப் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நாடாளுமன்றம் என்பது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு வகைகளைக் கொண்டது எனவும், இந்த இரு அவைகளின் தலைவராக நாட்டின் குடியரசுத் தலைவர் செயல்படுகிறார் எனவும், எனவே குடியரசுத் தலைவரே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக, ஒரு பழங்குடியின பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக அமர வைத்தது மட்டுமல்லாமல், அவருக்கான அரசியல் சாசன உரிமை மற்றும் மரியாதையை அளிக்க வேண்டும். ஆனால், அது இங்கு நிராகரிக்கப்படுவதாக இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பாஜக அரசை கடுமையாக சாடினர்.
மேலும், சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதனையடுத்து, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. அந்த வகையில், திமுகவும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திருச்சி சிவா எம்பி கூறி உள்ளார்.
-
DMK (Dravida Munnetra Kazhagam) will boycott the new Parliament building inauguration: DMK MP Tiruchi Siva to ANI pic.twitter.com/CG3JPlbjed
— ANI (@ANI) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">DMK (Dravida Munnetra Kazhagam) will boycott the new Parliament building inauguration: DMK MP Tiruchi Siva to ANI pic.twitter.com/CG3JPlbjed
— ANI (@ANI) May 24, 2023DMK (Dravida Munnetra Kazhagam) will boycott the new Parliament building inauguration: DMK MP Tiruchi Siva to ANI pic.twitter.com/CG3JPlbjed
— ANI (@ANI) May 24, 2023
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணிக்கிறது. அதேநேரம், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி இந்த விவகாரம் தொடர்பாக இது வரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. இதனால், புதிய நாடாளுமன்ற கட்டட விழா திறப்பு நிகழ்வுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்ற கட்டடம், கடந்த 1927ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த கட்டடத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் பணிகளை மேற்கொள்ள ஏதுவான இட வசதி இல்லாததால் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒரே நேரத்தில் 884 உறுப்பினர்கள் அமர முடியும். அது மட்டுமல்லாமல், துறை வாரியாக தனித்தனி சேம்பர்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் டிஜிட்டல் மற்றும் அழைப்பிதழ் வடிவத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: அடுத்த பிரதமர் நானா? சரத் பவார் கொடுத்த விளக்கம்!