புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசை கண்டித்தும், மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சாலை வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!