பெங்களூரு (கர்நாடகா): கர்நாடக பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான டி கே சிவகுமார் இன்று (செப் 7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராமநகரா மாவட்டத்தில் பாயும் காவிரி நதிக்கு இடையில் மேகதாது சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்கான ஒப்புதலை விரைந்து பெற பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக, மண்டியா மாவட்டத்தில் பாயும் காவிரி நதிக்கு இடையில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை பாஜக தலைவர்கள் பார்வையிடச் சென்றதை டி கே சிவகுமார் அறிந்து இருந்தார். இதனையடுத்து பேசிய டி கே சிவகுமார், “கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு பாஜக நண்பர்கள் சென்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் செல்லட்டும். அதே போன்று, அவர்கள் டெல்லிக்குச் சென்று மேகதாது சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
மேலும், அவர்கள் இந்த திட்டத்துக்காக ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், அனைத்து இடையூறுகளையும் களைந்து முழு அனுமதியைப் பெற வேண்டும். அப்போதுதான், காவிரி நீருக்காக பாஜகவின் போராட்டத்திற்கு சில மதிப்பு கிடைக்கும். ஏன் முந்தைய பாஜக அரசு இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது? அவ்வாறு இருந்தும் ஏன் அதற்கான அனுமதியை அவர்கள் பெறவில்லை?
முதலில் பாஜகவினர் அதற்கான ஒப்புதலை பெறட்டும். காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே நிலவும் பிரச்னை குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
மேலும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளேன். பிரதமர் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டால், உடனடியாக கட்சி பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வோம்” என தெரிவித்தார்.
இதனிடையே, பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தது என்பதும், இது தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “செப்.12-க்குப் பிறகு தமிழகத்திற்கு நீர் திறந்து விட சாத்தியமில்லை” - கர்நாடக அரசு