மஹாராஷ்டிராவை ஆளும் சிவசேனா தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.
இதனிடையே கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் உட்பட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சிவனேசா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தகுதி நீக்கம் தொடர்பாக 16 எம்.எல்.ஏக்களுக்கும் துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இன்றைக்குள் ( ஜூன் 27 ) பதில் அளிக்க நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கவும், சட்டப்பேரவைக் குழுத்தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதை ரத்து செய்யவும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவை ஏன் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என ஏக்நாத் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் துணை சபாநாயகரின் நோட்டீஸுக்குப் பதிலளிக்க ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களுக்கு ஜூலை 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி இடைக்காலத் தீர்ப்பு அளித்தது.
இதையும் படிங்க: PRIDE மாதம் முடிவதற்குள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்