மும்பை : லதா மங்கேஷ்கர், நிமோனியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஜன.8ஆம் தேதி கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஜன.28ஆம் தேதிவரை வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, பிப்.5ஆம் தேதி மிகவும் கவலைக்கிடமானதால், மீண்டும் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (பிப். 6) காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92. லதா மங்கேஷ்கரின் இறப்பு செய்தியை அவரது தங்கை உஷா மங்கேஷ்கர் உறுதிசெய்தார்.
அவரது இழப்பிற்கு திரைத்துறைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். லதா மங்கேஷ்கர் உடலுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஷாருக்கான் லதா மங்கேஷ்கரின் பாதத்தை தொட்டு மரியாதை செலுத்தும் போது அவர் துப்பினார் என தற்போது செய்தி பரவலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் துப்பினாரா?
இது தற்போது ட்விட்டர் பக்கத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. ட்விட்டர் பயனாளர் ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
ஷாருக்கான் ஆதரவாளர்கள், “ஷாருக்கான் போல் யாரும் இல்லை. அவர் போல் எவராலும் இருக்க முடியாது. ஷாருக்கானை மீது சிலர் கொண்ட வெறுப்பு அவரை இன்னும் நேசிக்கவும், மதிக்கவும் செய்திறது. ஷாருக்கானின் ரசிகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிலர், லதா மங்கேஷ்கரின் இறுதி மரியாதை செலுத்தும் போது லதா மங்கேஷ்கரின் உடலில் எச்சில் துப்பியதை நம்ப முடியவில்லை. இதனை உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சொந்த மக்களிடமோ பயிற்சி செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சிலர் இந்தச் செயலை துஆ என்கின்றனர். அதாவது இது ஒரு இறுதி பிரார்த்தனை.
இது குறித்து ட்விட்டர்வாசி ஒருவர், "லதா மங்கேஷ்கரின் உடலுக்கு ஷாருக்கான் செலுத்தியது ஃபாத்திஹா' இஸ்லாத்தின் பொதுவான நடைமுறையாகும். இந்த நடைமுறையில் புனித குரானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை ஓதுவது அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியும் :லதா மங்கேஷ்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சச்சின், ஷாருக்கான்