கத்திஹார் (பீகார்): நமக்கு சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை; கடுமையான போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது. ஆங்கிலேயர்கள் நமது நிலத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தனர். அவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவர்களில், சிலருக்கு புகழ் வெளிச்சம் கிடைத்தது; பலர் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டனர். சுதந்திர இந்தியாவை காண்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்படி சுதந்திரத்தை முழு மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்தான் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தை சேர்ந்த துருவ் குண்டு.
துருவ் குண்டு சமரக் நிர்மான் இயக்கத்தின் தலைவர் கௌதம் வெர்மா, நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த புரட்சியாளர்களில் துருவ் குண்டு முக்கியமானவர்; தாய் நிலத்தை நேசிக்க வயது தடையல்ல என்பதை உணர்த்திவிட்டுச் சென்றவர் அவர் என்கிறார்.
1942ஆம் ஆண்டு காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் துருவ் பங்கேற்றார். அதே ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி புரட்சியாளர்கள் குழு, பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு தீயிட்டு ஆவணங்களை அழித்தது. ஆகஸ்ட் 13ஆம் தேதி கத்திஹாரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது, ஆங்கிலேயர்கள் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றினர்.
இந்த சம்பவம் குறித்து வரலாற்று ஆசிரியர் போலநாத் அலோக் கூறுகையில், துருவ் குண்டு என்ற 13 வயது சிறுவன், முகர்ஜி எனும் துணைப் பிரிவு அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி இந்த போராட்டத்தில் கலந்துகொண்டான் என்கிறார்.
துருவின் தைரியம் ஆங்கிலேயர்களை ஆத்திரமடையச் செய்தது. ஆங்கிலேயர்கள் சுட்டதில் துருவ் தொடையில் படுகாயமடைந்தார். புர்னியாவில் உள்ள சதார் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற துருவ், 1942 ஆகஸ்ட் 15ஆம் தேதி காயம் காரணமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பழசிராஜா: ஆங்கிலேயரை அச்சுறுத்திய மக்கள் போராளி