டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெடிப்பால், பல்வேறு வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்தும் விழுந்தன. இதனிடையே நில அதிர்வு காரணமாக ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதையும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட உத்ரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதியில் இருந்த மக்கள் அரசு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
ரூ.1.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: ஜோஷிமத் நகரில், புவியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஜோஷிமத் நகரின் தற்போதைய நிலை குறித்த செயற்கைக்கோள் படத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டது.
இதனிடையே நில வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மாநில அரசு நிவாரணம் அறிவித்தது. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும், வாடகை வீடுகளில் தங்க விரும்பும் மக்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்தது.
உத்ரகாண்ட் அமைச்சரவைக் கூட்டம்: தொடர்ந்து குடியிருப்புகளின் அருகே இடியும் தருவாயில் உள்ள இரு பெரிய ஹோட்டல்களை மாநில பொதுப் பணித்துறை மற்றும் தேசியப் பேரிடன் மீட்புப் படை அதிகாரிகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜோஷிமத் நில அதிர்வு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாடகைத் தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தற்போது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம்: மேலும், நில அதிர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறு வாழ்வு அளிக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்ட இடங்களில் புவியியல் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நில அதிர்வால் விரிசல் விழுந்த வீடுகள், கட்டடங்கள் எனப் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பின்படி பொது மக்களுக்குத் தேவையான நிவாரண தொகுப்பை உருவாக்கும் பணி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
அரசு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு இழப்பீடாக நாளொன்றுக்கு 950 ரூபாய் வீதம் வாடகையும், புலம் பெயர்ந்த விலங்குகளுக்கு ஏற்ப 15 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உத்தரகாண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய லெக்பால்(Lekhpal) தேர்வின் வினாத் தாள்களை லீக் செய்தவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கவும், அதற்கு என தனியாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Masthan Murder: சாதிக் பாஷா கொலையைப்போல சந்தேகம் - மஸ்தானின் தம்பி மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..