கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் குணசாகர் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மேலவை உறுப்பினரும், கர்நாடக சட்ட மேலவையின் துணை தலைவருமான எஸ்.எல். தர்மே கவுடா சடலமாக மீட்கப்பட்டார். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நேற்று (டிச.28) மாலை தனது வீட்டிலிருந்து தனியே வெளியே சென்ற தர்மே கவுடா, வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அவரது பாதுகாவலர்கள், காவல்துறையினர், உள்ளூர்வாசிகள் தர்மே கவுடாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், இன்று(டிச.29) காலை அவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி கர்நாடக விதான பரிஷத் (கவுன்சில்) அமர்வில், அதன் தலைவர் கே. பிரதாப சந்திர ஷெட்டிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவை உறுப்பினர்கள் எஸ்.எல்.தர்மே கவுடாவை நற்காலியிலிருந்து கீழே இழுத்துத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.