ஹைதராபாத்: ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தும் இந்தியாவில் அரசியல் என்பது வியாபாரமாக மாறி நீண்ட காலமாகிறது. மக்கள் பிரதிநிதகளை விலைக்கு வாங்குவது என்பது வாக்குரிமையை மதிப்புள்ளதாக கருதும் சாமானியனுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாகும்.
இது பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, பொறுப்புள்ள நேர்மையான அரசியல்வாதிகளிடம் நாட்டைக்கொடுக்கும் ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்துகிறது. பணத்தை வைத்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை வீழ்த்துவது என்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே வேரோடு பிடுங்குவதாகும்.
அண்மையில் தெலங்கானாவில் இதுபோன்ற ஒரு முயற்சி நடந்தது. டிஆர்எஸ் எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி பாஜக வாங்க முயற்சிப்பதாக முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார். அதேபோல் ஆம்ஆத்மி எம்எல்ஏக்களையும் வாங்க பாஜக முயற்சித்ததாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இதுபோல குதிரைபேரம் நடத்தும் அனைவரும் அரசியல்தான் இதுபோன்ற நிலைக்குத் தங்களை தள்ளுகிறது என வாதிடுவார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசு கவிழ்க்கப்பட்டது தொடங்கி, பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கவிழ்த்தது. 1984இல் முழுப்பெரும்பான்மை பெற்றிருந்த என்.டி.ஆர் அரசாங்கத்தை இந்திராகாந்தி தூக்கியெறிந்தார். காலங்கள் கடந்த நிலையில், தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவால் பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. உச்ச நிலையை அடைந்தது முதல், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது, பாஜக.
அருணாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தாமரை மலர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகளின் கூட்டணியினை உடைத்து, ஆட்சியை நிலைகுலையச்செய்தது. பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், எந்த அரசியல் கட்சியும் அதன் உச்ச நிலையில் இருக்கும்போது இதுபோன்ற செயல்களையே செய்கின்றன. பண பலமும், படை பலமும் கொண்ட இதுபோன்ற அரசியல், ஜனநாயகத்தை நேரடியாக தாக்கி அதை முழுவதுமாக அழித்துவிடும். "மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவோம்" என்பதுதான் அரசியல் கட்சிகளின் இறுதி நம்பிக்கை.
இத்தகைய அணுகுமுறை, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பெருமையை பொய்யாக்குகிறது. அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைப் பெற தங்களது சுயத்தையும், ஆன்மாவையும் பணயம் வைக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவுறுத்தியிருந்தார். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக தவறான வழிகளைப் பின்பற்றுவது என்பது சாதாரண விஷயம் என்ற நிலைக்குத் தற்போதைய அரசியல் சென்றுவிட்டது. "நாற்பது திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், அவர்கள் தங்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள்..." என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் எதனை குறிப்பிடுகிறார்கள்?
வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் அரசும், அரசின் குறைகளைச்சுட்டிக் காட்டும் எதிர்க்கட்சியும் ஜனநாயகம் எனும் தேரின் இரண்டு சக்கரங்கள். ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான அங்கமாக இருக்க வேண்டிய பத்திரிகைகள் ஆளும் கட்சிகளின் கைக்கூலியாகவும் மாறி வருகின்றன. தற்போதுள்ள சூழல் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக கூற அனுமதிக்கவில்லை. ஜனநாயகமாக செயல்படும் பல நிறுவனங்களின் குரல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.
பல நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அடிபணிந்துவிட்டன. நாடு இதுபோன்ற குப்பைக் கிடங்கில் புரளும்போது, மக்களின் அடிப்படை உரிமைகளும் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.
இதுதான் ஆண்டாடுகாலமாக தேசத் தலைவர்கள் எதிர்பார்த்த சுதந்திரமா? நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டும் நிலையில், அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசியல் அமைப்புகள், தேசத்தின் மீது அக்கறை கொண்ட அறிவார்ந்த தலைவர்கள், மக்கள் என அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது. ஈநாடு தலையங்கம்
இதையும் படிங்க: எந்த மாதிரியான தேர்தல்கள் இவை..?