டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நேற்று (ஜுலை 17) இரவு 11 மணியளவில் யமுனை நதியின் நீர்மட்டம் 206.01 மீட்டராகப் பதிவாகி உள்ளது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் முன்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், திடீரென நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.
முன்னதாக, நேற்று காலை யமுனையின் நீர்மட்டம் 205.48 மீட்டரைத் தாண்டி இருந்தது. டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையிலும், இது அபாய அளவான 205.33 மீட்டரை விட சற்று அதிகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய நீர் ஆணையம் வெளியிட்டு உள்ள தகவல்களின்படி, டெல்லியின் பெரும்பகுதியை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ள நிலையில், யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று காலை 7 மணிக்கு அபாய அளவைத் தாண்டி 205.48 ஆக பதிவாகி இருந்தது. நேற்றைய முன்தினம் (ஜூலை 16) காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 206.02 மீட்டர் ஆக இருந்தது.
இதனிடையே, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இருப்பதால், டெல்லியில் மாநில அரசால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என டெல்லி அமைச்சர் அதிஷி அறிவுறுத்தி உள்ளார்.
யமுனையின் நீர்மட்டம் குறைவதை கருத்தில் கொண்டு, டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை அதன் பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தியுள்ளது. டெல்லியில் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இனி சிங்கு எல்லையில் இருந்து மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லியின் ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட் வரை இயக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் சிங்கு எல்லையை மட்டுமே அடைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 13ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட உத்தரவில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சிங்கு எல்லை, பதர்பூர் எல்லை, லோனி எல்லை மற்றும் சில்லா எல்லையில் இருந்து டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்