வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
ஆனால், சில வழிதடங்களில் மட்டுமே பேரணி நடத்த காவல் துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், காவல் துறை நிபந்தனையை மீறி மத்திய டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரை மீறி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள், அதன் உச்சியில் சீக்கிய கொடியை ஏற்றிவைத்து பரபரப்பை பற்றவைத்தனர். மாலை வரை நீடித்த வன்முறையை, காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் 86 பேர் காயமடைந்துள்ளதாகவும், பொது, தனியார் சொத்துகள் சேதமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறையை தொடர்ந்து, டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.