டெல்லி: சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜக்குலின் பெர்ணான்டஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர், ஜக்குலினுக்கும், ஜக்குலினின் குடும்பத்தினருக்கும் ரூ. 5 கோடிக்கும் மேலாக பரிசுப் பொருள்களை வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜக்குலின் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். இந்த நிலையில், பிரபல நடிகை நோரா ஃபதேஹி, மீண்டும் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். இவர், முன்னதாக கடந்தாண்டு அக். 14ஆம் தேதி, அமலாக்கத்துறையின் முன் ஆஜராகியிருந்தார்.
4 மணிநேர விசாரணை: அதன்பின் நேற்று (செப். 2) டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையின் முன் விசாரணைக்கு ஆஜரானார். சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு குறித்தும், அவரது குற்றப்பின்னணி குறித்தும் அவரிடம் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நோரா ஃபதேஹி, பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நிலையில், 'பாகுபலி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மனோஹரி' பாடலுக்கு நடனமாடி தென்னிந்தியாவிலும் பிரபலமடைந்தார்.
யார் இந்த சுகேஷ்...?: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதிமுக பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்கு வழங்குவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயன்றதாக கூறப்பட்டது.
அப்போது, டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை, பெங்களூருவில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார்கள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சுகேஷின் மனைவி லீனா மரியாவும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சுகேஷ் சந்திரசேகர் கோடிகளை சம்பாதித்து குவித்ததின் பின்னணி என்ன?