டெல்லி: தலைநகர் டெல்லியின் கரோலா பாக் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றின் காவலாளி, மதுபோதையில் அங்குள்ள பெண்ணின் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்தியுள்ளார். இந்தச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. இதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னதாக, இந்த விடுதியின் உரிமையாளரிடம் புகார் அளித்தபோதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதுகுறித்து காவல் துறையிலும் யாரும் புகார் அளிக்கவில்லை.
மேலும் இதுகுறித்து ஏன் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என டெல்லி காவல் துறைக்கு, டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் சுவாதி மலிவால் நேற்று (ஆக. 16) கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், விடுதியில் இருந்த பெண்ணைத் தாக்கி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்ற பாதுகாவலர் மீது டெல்லி காவல் துறை தானாக முன்வந்து இன்று (ஆக. 17) வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளது.
"புகார்தாரர் வாக்குமூலம் அளிக்க முற்றிலும் சட்ட ரீதியாக வாய்ப்பில்லை என்பதால், சட்ட ரீதியான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில், சிசிடிவி வீடியோவை ஆதாரமாக வைத்து, காவல் துறை இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குத்தொடர்ந்துள்ளது" என மூத்த காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது, போலீசார் தானாக வழக்குத்தொடர்ந்த பின்னர், டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Video: சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசும் போது மாரடைப்பால் தொழிலதிபர் மரணம்