புதுடெல்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) கும்பலுக்கு உளவு பார்த்ததாக மொஹ்சீன் என்பவர், டில்லி குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டார். அவர் தனது சகோதரருடன் இரும்பு உடைக்கும் தொழிற்சாலையில், பழைய இரும்பு வியாபாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர், ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட பரம்ஜித் என்ற ராணுவ வீரருக்கு பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
விசாரணை
இதனைத் தொடர்ந்து மொஹ்சீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து பணிபுரியும் ஒரு ஊழியரின் பெயரை அவர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புக்காக உளவு பார்த்ததாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை மற்றொரு நபரை கைது செய்தது. அவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே ஆக்ராவைச் சேர்ந்த ராணுவ வீரர் பரம்ஜித் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
இருவரிடமிருந்தும் பல ஆவணங்கள் மீட்கப்பட்டு, வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. உளவு மோசடி தொடர்பான கூடுதல் விவரங்களை கண்டுபிடிக்க, டில்லி காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு