டெல்லி: இன்று (நவ.25) காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் என டெல்லிக்கான காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பு (Air Quality Early Warning System for Delhi) தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று தொடங்கி காற்றின் தரம் மிகவும் மோசமான வகையிலேயே இருக்கும். நவம்பர் 27ஆம் தேதி முதல் படிப்படியாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் வானிலை
முன்னதாக காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR- System of Air Quality and Weather Forecasting and Research) வெளியிட்ட அறிக்கையில் “அடுத்த மூன்று நாள்களுக்கு உள்ளூர் மேற்பரப்பு காற்று (Local surface winds) ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.
இது காற்றின் தரம் மோசமடைய வழிவகுக்கும். காற்றின் தரத்தை நிர்ணயிப்பதில் உள்ளூர் வானிலை ஆதிக்கம் செலுத்தும்" எனத் தெரிவித்திருந்தது.
இன்று காலை 8.30 மணியளவில் டெல்லி காற்றில் ஈரப்பதம் 95 விழுக்காடாக பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்த வாரம் முழுவதும் தலைநகர் டெல்லியில் பனிமூட்டமான காலையே இருக்கும்.
காற்று தரக் குறியீடு நிர்ணயம்
காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சான்றுகளின்படி, காற்றுத் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட குறியீடு 'சிறப்பானது', 51இல் இருந்து 100 வரையிலான குறியீடு 'திருப்திகரமானது'.101 மற்றும் 200 இடைப்பட்ட பகுதி 'மிதமானது'. 301க்கும் 400க்கும் இடையே 'மிகவும் மோசமானது'. 401க்கு மேலே இருந்தால் 'கடுமையானது' எனக் கருதப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்குப் பின் காற்று மாசு உச்சத்தை தொட்டதால், தலைநகர் டெல்லியில் நவம்பர் 13ஆம் தேதி மாசு லாக்டவுன் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் அறிவித்தார். அதன்படி, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
நிலைமை மெல்ல சீராகிவருவதால் நவம்பர் 29ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Delhi air quality: டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்