டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அலுவலர்கள் நேற்று (மே 30) அவரை கைது செய்தனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவரின் குடும்பத்தினர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சத்யேந்தர் ஜெயின் ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை சத்யேந்தர் ஜெயினை நேற்று அதிரடியாக கைது செய்தது.
இன்று (மே 31) டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
முன்னதாக, சத்யேந்தர் ஜெயின் கைது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "சத்யேந்தர் ஜெயின் கைது தொடர்பான வழக்கை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தேன். இது அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு. நாங்கள் ஊழலை அனுமதிக்க மாட்டோம். ஊழல் செய்யமாட்டோம். நேர்மையாக அரசு நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசியல் காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்!