ஹைதராபாத்: டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 160 ஆவது பிரிவின் கீழ் டிசம்பர் 6 ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
விசாரணைக்கு ஆஜராக அவருக்கு உகந்த இடத்தை கூறும்படி சிபிஐ அனுப்பியிருந்த நோட்டீஸுக்கு, ஹைதராபாத் இல்லத்தில் தன்னை சந்திக்கலாம் என்று அதிகாரிகளுக்கு கவிதா பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
ஊழல் மோசடி தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையில் அவரது பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கவிதா தெரிவித்தார்.
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் மீது சிபிஐ நவம்பர் 25 ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்நிலையில் சிபிஐக்கு தெலங்கானா முதலமைச்சர் மகள் கவிதா இன்று (டிச. 5) கடிதம் எழுதியுள்ளார். அதில் டிசம்பர் 6 ஆம் தேதி முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 11, 12, 14 அல்லது 15 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் காந்தியின் கட்சி - ராகுல் காந்தி