டெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அது தொடர்பாகச் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்-வின் மகளும் எம்.எல்.சி உறுப்பினருமான கவிதா, ஆந்திர பிரதேச எம்.பி. மகுந்த ஸ்ரீநிவாசலு ரெட்டி உள்ளிட்டோரின் பெயர்கள் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளன.
வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட விஜய் நாயர், சமீர் மகேந்துரு உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோரின் பெயர்களைக் குற்றப்பத்திரிக்கையில் இணைத்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் இந்தோஸ்பிரிட்ஸ் நிறுவனம், டெல்லியில் உள்ள 9 சில்லறை விற்பனை மண்டலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஏறத்தாழ 14 கோடி மது பாட்டில்களை விற்று 192 கோடியே 80 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் டெல்லி அரசுக்கு ஏறத்தாழ 2 ஆயிரத்து 873 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கவிதா, எம்.பி மகுந்தா ஸ்ரீநிவாசலு ரெட்டி ஆகியோர் நிர்வகிக்கும் சவுத் குருப் நிறுவனம் வழங்கிய 100 கோடி ரூபாய் பணத்தை விஜய் நாயர் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு வழங்கி முறைகேடு நடத்தியதாகக் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாக வழங்கப்பட்ட 100 கோடி ரூபாய் பணத்தைத் திரும்பப் பெற இந்தோஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 65 சதவீத பங்குகள், சவுத் குருபிற்கு வழங்கப்பட்டதாகவும், ஏறத்தாழ 36 பேர் இந்த வழக்கில் தொடர்பில் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "தமிழக வர்த்தக வளர்ச்சிக்காக விமான நிலையங்களை நவீனப்படுத்த வேண்டியுள்ளது" - திமுக எம்.பி வில்சன்!