டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் கருவில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளதால் கருகலைப்பு செய்ய அனுமதிகோரி 26 வயது பெண் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், '33 வாரங்கள் ஆகும் கருவிற்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளது பரிசோதனையில் தெரியவந்தது. ஆகையால், கருவை கலைக்க மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டனர். ஆகையால் இந்த கருகலைப்பு செய்துகொள்ள தனக்கு அனுமதி அளிக்குமாறு" கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், “கருகலைப்பில் ஒரு தாயின் முடிவே இறுதியானதாகப் பார்க்க வேண்டி உள்ளது. மனுதாரர் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதில் உள்ள வலிகள் மற்றும் கருகலைப்பில் உள்ள சிரமங்களை அறிந்துள்ளார் என்பதை உணரமுடிகிறது.
மேலும் மனுதாரர் அனைத்து காரணிகளையும் சிந்தித்தே தனது கருவை கலைக்க முடிவை எடுத்துள்ளார். எனவே அந்தப் பெண்ணின் விருப்பப்படி எந்த மருத்துவமனையிலும் கருகலைப்பு செய்துகொள்ளலாம்” வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தரப்படும் உதவிகளை உறுதிசெய்க - மத்திய அரசுக்கு உத்தரவு