புதுடெல்லி: இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே மதத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் நடந்ததால், சிறுமி கடத்தப்பட்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சிறுமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், தான் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், இப்போது பெற்றோர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இஸ்லாமிய சட்டப்படி வயதுக்கு வந்த பெண், பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும் கணவருடன் வாழ அவருக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்தது.
இதில் இளைஞர் மீதான போக்சோ சட்டத்தை ரத்து செய்து, தம்பதியரின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் உத்தரவிட்டது.