நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் ஓரளவிற்குக் குறைந்துவரும்போதிலும், டெல்லியில் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தொற்றுப் பரவல், காற்று மாசு என நாட்டின் தலைநகர் பெறும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய அரசு ஊழியர்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய டெல்லி மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறைகளின் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் எந்த நேரத்திலும் தொலைபேசி, வாட்ஸ்அப், மின்னஞ்சலில் தொடர்புகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட எந்தவொரு அலுவலரும் தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு அழைக்கப்படலாம். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதிகாரம்பெற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக முன் அனுமதி பெற்ற பின் மட்டுமே நகரத்தை விட்டு வெளியேற வேண்டும். இந்த நடைமுறை டிசம்பர் 31 வரை அல்லது அடுத்த உத்தரவுகள் வரும் வரை நடைமுறையில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தலைமைச் செயலர் விஜய் தேவ் நவம்பர் 29ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், "அனைத்து அரசு அலுவலகங்களும் கிரேட் ஒன்றுக்கு சமமான மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்களைக் கொண்ட 100 விழுக்காடு அலுவலங்கள் செயல்படும். மீதமுள்ள ஊழியர்கள் 50 விழுக்காடு வரை தேவைக்கேற்ப அலுவலங்களில் வேலை செய்ய அழைக்கப்படுவார்கள். இந்த நடைமுறை டிசம்பர் 31ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரையும் அமலில் இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவின்படி, டெல்லி அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை 100 விழுக்காடு அலுவலர்களுடன் செயல்படும்.
இதையும் படிங்க: ஒரு சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் - பிரதமர் மோடி