டெல்லி: மதுபான வரிவிதிப்பு கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து இன்று (அக்.30) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் அண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த கொள்கையிலுள்ள முக்கிய அம்சங்களைக் குறிப்பாக மதுபானத்திற்கு வரிக் குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் குறித்த விவரங்களைக் கொள்கை வெளிவருவதற்கு முன்பு தெரியப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் டெல்லி துணைநிலை ஆளுநர் சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்தார். இதன்படி, டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை செய்தது. இது தொடர்பாக, 2023 பிப்ரவரி மாதம் மணீஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தனது துணை முதலமைச்சர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். அதன்பின், கடந்த 8 மாதங்களாகச் சிறையிலுள்ள மணீஷ் சிசோடியா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறும் போது, பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் சிபிஐ லஞ்சம் பெற்றதாக எந்த புகாரும் இல்லை எனவும், கொள்கை முன்னறிவிப்பு குற்றம் இல்லை மேலும், விசாரணை தொடங்கப்படாத நிலையில் வழக்கில், 500 சாட்சிகள் மற்றும் 50,000 ஆவணங்கள் விசாரிக்கப்பட உள்ளன. குற்றச்சாட்டின் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் சிறையில் அடைக்கமுடியாது எனத் தெரிவித்தார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில், ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ கூறும் போது, பண மோசடி தடுப்பு சட்டத்தை (PMLA) நிரூபிக்க முடியும் எனவும் மேலும் விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. மனுதாரர் துணை முதலமைச்சராக இருந்தவர் எனவே, ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது என கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சராக இருந்ததால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. அதே போல் மனுதாரருக்குச் சட்டத்தின் கீழ் எந்தப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறதோ, அதே பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும் மேலும் விசாரணை அமைப்புகள் 6 முதல் 8 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் விசாரணைக் காலம் நீடிக்க வேண்டியிருந்தால் மனுதாரர் மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்!