டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட ஏராளமான மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷனை கைது செய்வதோடு மட்டுமல்லாமல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் பிரிஜ் பூஷனை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசவும் முயற்சி செய்தனர்.
அதன் பிறகு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், பிரிஜ் பூஷன் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதையடுத்து, கடந்த ஜூன் 15ஆம் தேதி டெல்லி போலீசார் ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று(ஜூலை 7) டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி போலீசாரின் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பிரிஜ் பூஷனுக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமர் இருவரும் வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் பிரிஜ் பூஷனிடம் கேட்டபோது, "நீதிமன்ற உத்தரவுப்படி நான் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன். நேரில் ஆஜராவதில் இருந்து எந்த விலக்கும் எனக்குத் தேவையில்லை" என்று கூறினார்.