டெல்லி : மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக உள்ளார். வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை 11 மணிக்கு, சிபிஐ தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகிறார்.
தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இந்த மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டு கெஜ்ரிவால் அரசால் வெளியிடப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும்; இதனால், சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு கைமாறாக அரசியல் கட்சியினரிடம் பெரும்தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினாய் குமார் சக்சேனா பரிந்துரை செய்தார். முறைகேடு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
இதே விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து உள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து தனியாக விசாரித்து வந்தது. இந்தப் புகார் தொடர்பாக மதுபானத்துறை தன் வசம் வைத்து இருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது.
கடந்த பிப்ரவரி மாதம் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே இந்தப் புகாரில் தொடர்புடையதாகக் கூறி தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும் சட்டப்பேரவை மேலவை உறுப்பினருமான கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அதில் சிபிஐ கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன் என்றும்; ஏனெனில் தான் எந்த தவறும் செய்யாததால் மறைக்க எதுவும் இல்லை என்றும் கூறினார்.
தன்னைக் கைது செய்ய சிபிஐக்கு பாஜக உத்தரவிடப்பட்டு இருப்பதுபோல் தெரிவதாகக் கூறிய அவர், நாட்டில் யாரையும் சிறையில் தள்ளும் சக்தி அவர்களக்கு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். எதிர்க் கட்சிகளை அதிலும், குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அடிக் அகமது துப்பாக்கிச்சூடு - "அராஜகத்தின் உச்சபட்சம்" - யோகி அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி!