"கரோனா தொற்று நிலைமையை சரியான முறையில் கையாள டெல்லி அரசு தவறிவிட்டது. டெல்லி நகரம் விரைவில் நாட்டின் கரோனா தலைநகராக மாறும்" என்று நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று சோதனைகளின் அடிப்படையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது என்று ஆம் ஆத்மி அரசு பல கூற்றுகளைக் கூறினாலும், டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துவருகிறது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
வடக்கு, தெற்கு, கிழக்கு டெல்லி மாநகராட்சிகளின் பல்வேறு பணியாளர்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படாதது தொடர்பான மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கும் வேளையில் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 842 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நான்கு லட்சத்து ஒன்பதாயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.