டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 8ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று நான்காம்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.
மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றுகூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.01) பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பங்கேற்றன. மத்திய அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுவில்லை. விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்ற அரசின் யோசனையை விவசாயிகள் ஏற்காததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் போராட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகளிடம் வலியுறுத்தும் என்றும், அப்போது விவசாயிகளுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:விவசாயிகள் போராட்டம்; பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ!