டெல்லி: கரோனா ஊரடங்கு காலத்தினைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்கள் தங்களது பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி பல்வேறு கைவினைப் பொருள்களைத் தயாரித்துள்ளனர். அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களது படைப்புகளை விற்பனை செய்யும் வகையிலும் டெல்லி நேரு அரங்கத்தில் பழங்குடியின மக்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி இன்று பாதுகாப்புத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கண்காட்சி, நடப்பாண்டில் கூடுதல் பொலிவுடன் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மற்றும் கைவினைக் கலைஞர்களை இணைத்துள்ளது.
26ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில், வடஇந்தியா, தென் இந்தியா, வட-கிழக்கு இந்தியா என அனைத்து பகுதி மக்களும் இணைந்துள்ளனர். இவர்கள் கரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை நிவர்த்தி செய்ய இந்தக் கண்காட்சி உதவும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்காட்சியைத் தொடங்கிவைத்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்த கைவினைப் பொருள்களின் கண்காட்சி நாட்டின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் தடத்திற்கான இணை அமைச்சர் மன்சுக் மண்டவி, நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.