டெல்லி: இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து, தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்-19 பணிக்குழுத் தலைவர் டாக்டர் என்.கே அரோரா, தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது," அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அடிப்படை அறிவியல்பூர்வமான காரணங்களால் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4-6 வாரங்களில் இருந்து, 12-16 வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில், இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறையின் நிர்வாக முகமை வெளியிட்ட தரவுகளின்படி, 12 வாரங்கள் இடைவெளி இருக்கும் போது, தடுப்பூசியின் செயல்திறன் 65 - 88 விழுக்காடு வரை இருப்பது தெரியவந்துள்ளது.
ஆல்ஃபா வகைத் தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது. இடைவெளியை 12 வாரங்களாக பின்பற்றியதால் இங்கிலாந்து மக்களால் மீள முடிந்தது.
இடைவெளி அதிகரிக்கும்போது, அடினோவெக்டர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை அறிவியல் காரணங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று நாங்களும் கருதினோம்.
எனவே, இந்த இடைவெளியை 12-16 வாரங்களாக உயர்த்த மே 13-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.
அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
"அறிவியலின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் வகையில், திறந்த மற்றும் வெளிப்படைத் தன்மையிலான முறையை நாம் கொண்டுள்ளோம். கோவிட் பணிக்குழு அந்த முடிவை எடுத்தபோது, எதிர்ப்புக் குரல்கள் எதுவுமே இல்லை.
இந்த விஷயம் குறித்து பிறகு தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் ஒளிவு மறைவில்லாமல் விவாதித்தபோது, அங்கும் எதிர்ப்புகள் எழவில்லை. தடுப்பூசிகளுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
முன்னதாக, நான்கு வார இடைவெளி என்ற முடிவு, அப்போது கைவசம் இருந்த சோதனைத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இடைவெளி அதிகரிக்கப்படும்போது தடுப்பூசியின் செயல்திறன் மேம்படுவதாகக் கிடைத்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டது.
கோவிஷீல்டு பற்றிய ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளை வழங்கின. இங்கிலாந்து போன்ற நாடுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியபோது 12 வார இடைவெளியைப் பின்பற்றின.
எங்களுக்கு இந்தத் தரவு தெரிய வந்தபோது, இடைவெளி குறித்த முடிவை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதால், நமது சோதனை தரவுகளில் சிறந்த எதிர்ப்பு ஆற்றல் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் நான்கு வார இடைவெளியை அறிவித்தோம்.
பின்னர் கூடுதல் அறிவியல் மற்றும் ஆய்வகத் தரவுகளை நாம் பெற்றபோது, இடைவெளி நான்கு வாரங்களாக இருக்கும்போது தடுப்பூசியின் செயல் திறன் சுமார் 57 சதவீதமாகவும், எட்டு வாரங்களாக இருக்கும்போது 60 சதவீதமாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், இடைவெளியை 4 வாரங்கள் முதல் 8 வாரங்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதினோம்.
தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, இடைவெளியை 12 வாரங்களாக ஏன் முன்னரே உயர்த்தவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, “இங்கிலாந்தின் (ஆஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியைப் பயன்படுத்தும் மற்றொரு மிகப்பெரும் நாடு) அடிமட்ட அளவிலான தரவிற்காக காத்திருப்பது என்று நாங்கள் முடிவு செய்தோம்” என்றார் டாக்டர் என் கே அரோரா.