தேஷ்பூர் : மணிப்பூர் கலவரத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 160க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.
இதனிடையே, குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் அடித்து துன்புறுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. அந்த இரு பெண்கள் பலமுறை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடந்த மே மாதம் 4ஆம் தேதி சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், மாநிலத்தில் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு கொடூர சம்பவங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டன.
இந்நிலையில், நெஞ்சை உலுக்கும் மற்றொரு கொடூர சம்பவம் மணிப்பூரில் அரங்கேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெய்தி இனத்தை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரரின் மனைவி, கலவர கும்பல்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிரிழந்தவர் 80 வயதான எஸ். இபெடோம்பி மைபி என்றும் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் எஸ். சுரந்த்சந்து சிங் என்பவரின் மனைவி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தவுபல் மாவட்டம் செரோ கிராமத்தில் எஸ். இபெடோம்பி மைபி வசித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி கலவரக் கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எஸ். இபெடோம்பி மைபியின் கணவர் சுரந்த்சந்த் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதாகவும், இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் கவுரவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஸ். இபெடோம்பி மைபி எரிந்த நிலையிலும், அவரது வீட்டில் பாதி எரிந்த புகைப்படங்கள், பதக்கங்கள், சுரந்த்சந்த் சிங்கின் நினைவுச் சின்னங்கள், பல விலையுயர்ந்த பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மற்றும் சுவர்களில் உள்ள தோட்டாக் குழிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மும்பை கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல்... RDX வெடிகுண்டுகளுடன் டேங்கர் லாரி கோவா சென்றதாக மிரட்டல்!