ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை(Andhra Rains) பொழிந்துவருகிறது. இதன் காரணமாக ராயலசீமா பகுதியைச் சேர்ந்த (Rayalaseema region) திருப்பதி, கடப்பா, சித்தூர், அனந்தப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் வெள்ள பாதிப்பு குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர வெள்ள பாதிப்பு குறித்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் எனப் பிரதமர் உறுதியளித்தார்.
உயிரிழப்பு விவரம்
கனமழை காரணமாக ஆந்திரா மாநிலத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கடப்பா மாநிலத்தில் 12 பேரும் அனந்தபூர் மாவட்டத்தில் எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர். பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கனமழைக் காரணமாக திருமலை திருப்பதி கோயில் மூடப்பட்டுள்ளது. மேலும், கடப்பா விமான நிலையம் நவம்பர் 25ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Leave: தொடர் மழை - 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை