மும்பை (verdict): ஒரு சாதாரண மனிதன், தனக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கப் பல போராட்டங்களைத் தாண்ட வேண்டிய சூழல் தான் தற்சமயம் நிலவுகிறது.
இருப்பினும், விடாது போராட்டம் செய்தால் நியாயமான நீதி என்றாவது ஒரு நாள் கிடைத்தே தீரும் என்பதற்குப் பல உதாரணங்களை நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். அப்படி ஓர் சம்பவம் தற்போது மஹாராஷ்டிரா மாநிலம், சந்திராபூரில் நடந்துள்ளது.
மாதம் ரூ.8,000 சம்பாதித்து தந்த வளர்ப்பு நாய்:
2013ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10ஆம் தேதி உமேஷ் பாட்கர் எனும் நபர் வளர்த்து வந்த ஜான் எனும் நாய், பள்ளி வாகனம் மோதிய விபத்தில் இறந்தது.
இவர் வளர்த்த நாய் இவருக்கு செல்லப்பிராணி மட்டுமின்றி, ஓர் தனியார் நிறுவனத்தின் காவல் நாயாகவும் இருந்து உமேஷிற்கு மாதம் ரூ.8,000 சம்பாதித்து தந்துள்ளது. இதனால் தன் செல்லப்பிராணியின் இழப்பு, உமேஷிற்குப் பெரும் மனக்கஷ்டத்தையும்,பொருளாதார இழப்பையும் தந்துள்ளது.
வளர்ப்பு நாயின் இறப்புக்கு 9 ஆண்டுகள் வரை சட்டப்போராட்டம்:
இதனையடுத்து, தன் நாயை இடித்த பள்ளி வாகன ஓட்டுநரிடமும், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடமும் இழப்பீடு கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.
இதனால், நாயின் உடலை பிரேத பரிசாதனைசெய்து வாகன ஓட்டுநர் மீதும், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வளர்ப்பு நாயின் இறப்பு தனக்கு பொருளாதார நஷ்டத்தை அளித்திருப்பதால், தனக்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இவரது வழக்கை வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் பாண்டே வாதாடி வந்தார்.
இந்த வழக்கு, 8 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களாக நீடித்து வந்தது. இந்நிலையில்,ஒரு வழியாக கடந்த டிசம்பர் 9ஆம் தேதி, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் உமேஷிற்கு ரூ.3 லட்சம் இழப்பீடாகத் தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியத் தீர்ப்பை நீதிபதி எஸ்.ஜே.அன்சாரி வழங்கினார். இந்த வழக்கு சந்திராபூர் மாவட்ட நீதிமன்ற வரலாற்றில் மிகுந்த வித்தியாசமான வழக்காகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:கேரள மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ் காலமானார்