கடந்த 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானது. ஜம்முவில் பெரும்பாலான பகுதிகளை பாஜகவும், காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளை குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணியும் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, "தேர்தலை வெளிப்படையாக நடத்தி ஜம்மு காஷ்மீரில் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளோம். மக்கள் அங்கு ஆர்வமாக வாக்களித்திருப்பது இந்தியாவுக்கு பெருமையான தருணம்.
டெல்லியில் உள்ள சிலர் ஜனநாயகம் குறித்து இரவு பகல் பாராமல் பாடம் எடுத்துவருகின்றனர். என்னை விமர்சித்து வருகின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள புதுச்சேரியில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் மக்கள் தங்களின் உழைப்பால் வெற்றிபெற்றுள்ளனர். பெயரால் (மத அடையாளம்) அல்ல" என்றார்.