டெல்லி: கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலையில் சிக்கி பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்திவருகின்றன.
2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற முன்னெடுப்பை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. எனினும் இது சாத்தியமில்லை என்ற கருத்துகளும் ஒலிக்கின்றன.
இதற்கு மத்தியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு இயக்குநரகம் சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சில நிபந்தனைகளுடன் பரிசோதனை, சோதனை மற்றும் பகுப்பாய்வுக்காக இந்தியாவில் ஸ்புட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு (Drugs Controller General of India) அனுமதி அளித்துள்ளது என்று வெள்ளிக்கிழமை தகவல் உறுதியாக கிடைத்தது.
ரஷ்யாவின் தொற்றுநோயியல் மற்றும் நுண்உயிரியலின் கமலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து சீரம் மருந்து நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பூனேயில் உள்ள ஹடாப்ஸர் மையத்தில் தயாரிக்க உள்ளது. ஆனால், ஆய்வு செய்யவும், பரிசோதனை நடத்தவும், ஹடாப்ஸர் மையத்துக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீரம் நிறுவனம் வியாழக்கிழமை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பிற்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது.
இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்த நான்கு நிபந்தனைகளின்படி, சீரம் நிறுவனத்திற்கு அனுமதி தருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், வைரஸ் பங்குகளை இறக்குமதி செய்வதற்கான, மரபணு கையாளுதலுக்கான மறுஆய்வுக் குழுவின் அனுமதி நகலையும், ஸ்புட்னிக் வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைத் தொடங்க மரபணு கையாளுதலுக்கான மறுஆய்வுக் குழு அனுமதி நகலையும் சீரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த உரிமம், ரத்து செய்யப்படாவிட்டால், ஜுன் 4 அன்று வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் காலத்திற்கு, அதைத் தயாரிப்பதற்கான அனுமதி சீரம் நிறுவனத்துக்கு கிடைக்கும்.
உயிரி தொழில்நுட்ப துறைக்கு செல் வங்கிகளை இறக்குமதி செய்வதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வதற்கும் மே 18 அன்று சீரம் நிறுவனம் மரபணு கையாளுதலுக்கான மறுஆய்வுக் குழு (ஆர்.சி.ஜி.எம்)வின் அனுமதியைக் கோரியது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களால் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அனுமதியைப் பெற்று, சீரம் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படிங்க: அடி தூள்- தடுப்பூசி ஆராய்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கிய கேரளா!