ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹ் கிராமத்தில், கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினர் ஊர்வலத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மக்கள் கூடியிருந்த கூடாரத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஆதிக்க சாதியினர் பட்டியலின சமூகத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆதிக்க சாதியினரின் கொடுமைகளைக் கண்டித்து, அக்கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் 300 பேர், கிராமத்தை விட்டு வெளியேறி, ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். சாதிக் கொடுமையை கண்டிக்கும் விதமாக கைகளில் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
குழந்தைகள், உடைமைகள், செல்லப்பிராணிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர். தங்கள் கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினர், வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதாகவும், இதனால் வேறு வழியில்லாமல் கிராமத்தை விட்டு வெளியேறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பட்டியலின மக்களின் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் தெரிவித்தார்.