லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் அக்ராபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாணமாக வயக்காடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
அதில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியின் கழுத்தை குற்றவாளிகள் நெறித்ததால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றவாளிகள் சிறுமியின் உடலை நகங்களால் கிழித்தும், மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை, போக்சோ ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவலர்கள் தேடிவருகின்றனர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க ஐந்து தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குறித்து பேசிய காவல்துறையினர், அக்ராபாத் பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி, ஆடுகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக காலை சுமார் 11 மணியளவில் வயல்வெளிக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் தேடியுள்ளனர். அப்போது, கோதுமை வயலில் சிறுமி அரைநிர்வாணமாக உடலின் பல பகுதிகளில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்தார்.