மும்பை: மும்பையைச் சேர்ந்த 21 வயதாகும் மாடல் அழகி ஒருவரிடம் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் நடிக்க வைப்பதாக கூறி சிலர் அப்பெண்ணிடம் இருந்து 10 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளனர்.
இது குறித்து அப்பெண் தஹிசார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பியூஷ் ஜெயின் மற்றும் மந்தன் ரூபாரேலே ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘முன்னதாக மாடலிங் துறையில் பணியாற்றி வரும் அப்பெண்ணிடம் தாங்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள் என அறிமுகமாகி, ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் ராம்சரணில் அடுத்த படமான “RC-15" என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரம் தருவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து திரைப்பட ஆவணங்கள் தயாரிப்பதற்கான கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் எனக் கூறி வங்கிக் கணக்குகளில் ரூ. 10,31,000 பரிமாற்றம் செய்யும்படி தெரிவித்துள்ளனர். திரைப்படங்கள் தொடர்பான ஆவணங்கள் என பல போலி ஆவணங்களை அப்பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர்" எனக் கூறினார்.
தற்போது இருவர் மீதும் மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வந்தியத் தேவன் பிளேபாயா? பொன்னியின் செல்வன் நாவல் கூறுவது என்ன?