டெல்லி: வங்கக் கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதிதீவிர புயலாக மாறி மேற்கு வங்கம் - ஒடிசா இடையே, பாலசோருக்கு அருகே நேற்று முன்தினம் (மே 26) கரையைக் கடந்தது.
கரையைக் கடந்த போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. இந்த புயலால், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பலத்த மழையும் பெய்ததால் இரு மாநிலங்களிலும் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது 'யாஸ்' புயலின் வேகம் தணிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அலுவலர்களுடன் நேற்று (மே 27) ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 136 குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டது குறித்து மோடியிடம் அலுவலர்கள் விளக்கினர்.
புயல் பற்றிய வானிலை முன்னெச்சரிக்கை துல்லியமாக இருந்ததால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதன் மூலம் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதையும் தெரிவித்தனர்.
மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று (மே 28) விமானம் மூலம் பார்வையிடுவார் என்றும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து அந்த மாநிலங்களின் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.